மலேசிய பயணம் – 1: கனவை வாழ்பவன்

கிருபாவிற்கு முதல் வெளிநாட்டு பயணம். எழுத்தாளர் ம. நவீன் அண்ணா என்னிடம், “ஜெயமோகன் GTLF வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார். நீங்களும் வரமுடியுமா எனப் பாருங்கள்?” எனச் சொன்னதும் இங்கிருந்து மலேசியா கிளம்பிவிட்டாள்.

மொத்த மலேசிய பயணமும் ஜெயமோகன் சார் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழாவில் (GTLF) கலந்துக் கொள்வதை ஒட்டி ஏற்பாடாகியது. ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா உலகில் நிகழும் மூன்றாவது பெரிய இலக்கிய விழா. இதில் தமிழுக்கு ஓர் அமர்வென்பது உலக இலக்கியத்தின் முன் தமிழ் இலக்கியத்தை நிறுத்தும் செயல். சென்ற ஆண்டு (2021) நிகழ்ந்த ஜார்ஜ் டவுன் விழாவில் எழுத்தாளர் ம. நவீனுக்கு ஓர் அரங்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பேய்ச்சி நாவலின் தடையை ஒட்டி ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு நவீன் சென்றிருந்தார். அவர் இம்முறை ஒருங்கிணைப்பாளரிடம் பேசி தமிழுக்கு மூன்று அமர்வுகளை ஏற்பாடு செய்தார்.

மலேசிய, சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர் பி.கிருஷ்ணனுக்கு ஒரு நாள் கருத்தரங்கையும் ஜார்ஜ் டவுன் இலக்கிய விழா குழுவினர்களுடன் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தார். நான் மலேசியா வருவதால் அதில் பி. கிருஷ்ணனின் துப்பறியும் நாடகங்களை படித்து ஒரு உரையாற்ற வேண்டும் என்றார். நவீன் அண்ணாவிடமிருந்து எனக்கு வருவது அனைத்தும் கட்டளைகள் மட்டுமே, அதனால் நான் சம்மதம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

அதனை ஒட்டி தமிழகத்திலிருந்து நண்பர்கள் வந்தால் நன்றாக இருக்கும் என்றார். மலேசிய இலக்கிய விழாவை முடித்து இந்தோனேஷியா பயணத் திட்டம் ஒன்று ஏற்பாடாகியது ஜெயமோகன் சாரின் ஸ்வீடன் பயணத்தால் அத்திட்டம் நிகழவில்லை. ஆனால் கிருபா என்னிடம் மலேசியாவில் குறைந்தது பத்து நாட்களாவது இருக்க வேண்டும் எனக் கட்டளை விதித்தாள். நவீன் அண்ணாவிடம் பேசி மொத்த பயணத் திட்டமும் ஏற்பாடாகியது.

19 ஆம் தேதி இரவு இந்தியாவிலிருந்து விமானம். அதற்கு கிருபா அக்டோபர் மாதத்திலிருந்தே பயணத் திட்டங்களை வகுக்கத் தொடங்கினாள். அவளுக்கு சந்தேகம் வரும் போது, “நவீன் அண்ணாட்ட இத கேட்டுச் சொல்லுவியா? நாம இங்க போக முடியுமான்னு” என்பாள். நான் அவளை நிதானத்திற்கு கொண்டு வருவதற்குள் பயண நாட்கள் நெருங்கிவிட்டது.

அவளுக்கு விசா நவம்பர் ஒன்பதாம் தேதியே வந்துவிட்டது. எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. ஏதோ கேள்வி கேட்டு திருப்பி அனுப்பியிருந்தனர். நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தும் விசா வராததால் ஒருவித பதட்டம். அப்போது நவீன் அண்ணா நியூசிலாந்த் பயணத்தில் இருந்தார். அவர் பயணத்தின் நடுவே என்னைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். இன்னும் மூன்று நாள் மீதமிருந்த நிலையில் விசா கிடைக்காது என்ற முடிவிற்கு கிருபா வந்தாள்.

கவலையுடன் என்னருகே வந்து, “இப்ப என்ன பண்றது?” எனக் கேட்டாள்.

நான், “தேதிய தள்ளி வச்சிரலாம்டி. அடுத்த வாரமும் அங்க இருந்திட்டு வரலாம். ஃப்ளைட் மாத்துறது கொஞ்சம் செலவு தான் இருந்தாலும் பரவால்ல பாத்துக்கலாம்” என்றேன். அவள் அதற்கு சமாதானம் ஆகவில்லை. தொடர் வாட்டம் அவள் முக ரேகைகளை கவ்வியிருந்தது.

நான் நவம்பர் 16 ஆம் தேதி ஈரோட்டிலிருந்து கிளம்பி சென்னை சென்றேன். நான் சென்ற தருணத்திலிருந்து கவலையும், புன்னகையும் அவள் முகத்தில் உசாலடின. நான் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து சமாதானம் செய்தேன்.

இறுதியாக ஒன்றைச் சொன்னேன். “நான் நவீன் அண்ணாட்ட பேசுறேன். நீ வேணும்னா முன்னாடி போய் சுத்திப்பாரு. நான் ரெண்டு நாள்ல வந்துர்றேன்.” என்றேன். புன்னகையுடன் கவலையுற்றாள், “நீயில்லாம எப்டி போறது” என்றாள்.

“ரெண்டு நாள் தானே நீ சுத்தி பாத்திட்டு இரு வந்துறேன்” என்றேன். அரை மனதுடன் ஒப்புக் கொண்டாள். ஆனால் அதன் பின் தொடர் பிலாக்கணம், “நீ இல்லாம எப்டி தனியா சுத்தப்போறேன்னு தெரியல்ல” என்று. ஆனால் எக்காரணம் கொண்டு அவள் மலேசிய விமானம் ஏறுவதில் மாற்று கருத்தை யோசிக்கவில்லை.

பலக்கட்ட குலறுபிடியை கடந்து விசா நவம்பர் 18 ஆம் தேதி கைக்கு வந்தது. இருவரும் நவம்பர் 19 மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டோம். இரவு பயணம், அதிகாலை நான்கு மணிக்கு மலேசியா சென்று சேர்ந்தோம். இமிகிரேஷன் சோதனைகளை கடந்து வெளியே வர மணி ஐந்தானது. எங்களுக்காக நவீன் அண்ணாவின் மாணவர் நிமலன் மூன்று மணி முதல் காத்துக் கொண்டிருந்தார். நவீன் அண்ணா அனுப்பி வைத்த புகைப்படத்தில் இருப்பதை விட இளமையாக தெரிந்தார். அவர் எங்கள் இருவரையும் அழைத்து பத்து மலையின் அருகே நவீன் அண்ணா எங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த விடுதியில் விட வந்திருந்தார்.

நாங்கள் இருவரும் மெட்ரோ பிடித்து வந்துவிடுவதாக கூறினோம். நவீன் அண்ணா அதனை ஏற்கவில்லை. எங்கள் பயணத் திட்டத்தை அவர் நியூசிலாந்தில் இருந்து வந்த அன்றே எனக்கு அனுப்பினார். விமானம் விட்டு இறங்கியது முதல் பினாங் இலக்கிய விழாவிற்கு செல்லும் வரை அனைத்து திட்டங்களையும் முன்னரே முடிவாக்கியிருந்தார். அவர் இயல்பு அது ஒன்றை எடுத்துக் கொண்டால் அதனை முன்னரே திட்டமிட்டு சரியான வகையில் செயலாற்றுவது. அது எத்தனை சிறிய விஷயமானாலும் சரி.

நாங்கள் இருவரும் பத்துமலையின் அருகே அண்ணா ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு காலை ஆறு மணிக்கு சென்று சேர்ந்தோம். பத்து மணி வரை குட்டி தூக்கம் அதன் பின் எழுந்து தயாராகி காலை உணவும், பத்துமலை முருகனையும் நாங்கள் பார்த்துவிட்டு தயாராக இருந்தால் நவீன் அண்ணா எங்களை மற்ற இடங்களுக்கு சுற்றிக் காட்ட அழைத்துச் செல்வதாக திட்டம்.

அறையில் கிருபா பர்சில் மலேசிய காசை வைத்துவிட்டு நூறு வெள்ளி பணம் மட்டும் எடுத்துக் கொண்டேன். கீழே வந்ததும், “என்ன சாப்டலாம், காலைல இட்லியே சாப்பிடலாமா?” என்றேன்.

கிருபா, “ஆமா ஆளுக்கு ரெண்டு இட்லி சாப்டுக்கலாம் என்ன பண்றது நூறு ரூபா தான் எடுத்திட்டு வந்திருக்க.” என்றாள். அவள் இன்னும் இந்தியச் சூழலிலிருந்து வெளிவரவில்லை எனப் புரிந்தது.

நாங்கள் கீழே வந்ததும் நவீன் அழைத்தார். எங்களைச் சுற்றி கண்காணிப்பு கேமரா வைத்திருக்கிறாரோ என்ற சந்தேகம் வந்தது. சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டு அவரது அழைப்பை எடுத்தேன்.

“நவின், நீங்க சாப்ட போறீங்கன்னா, உங்க அறைக்கு கீழயே ஒரு உணவகம் இருக்கும். நல்ல அசைவம் கெடைக்கும். பத்துமலைலயே நல்ல அசைவ கெடைக்கிற உணவகம் அதான்” என்றார்.  சந்தேகமே இல்லை அவர் கண்காணிக்கார் என்பது உறுதியானது. கேமரா கொண்டு இல்லை என்றாலும் உளதளவில் என்னை பின் தொடர்கிறார் எனப் புரிந்தது. அது அண்ணனின் இயல்பு. தந்தையின் இயல்பும் கூட.

இருவரும் கடைக்குள் சென்றோம். சென்று அமர்ந்ததும் கிருபா ஆர்டர் எடுப்பவரிடம் அன்பாக, “என்ன மலாய் உணவு கிடைக்கும்?” எனக் கேட்டாள்.

அவர் உடனே என்ன நினைத்திருப்பார் என ஊகித்தேன், “ஊர் சுத்திபாக்க வந்த முதல் நாளா?” என்றே நினைத்திருப்பார்.

அவள் முன் நான் எதுவும் பேச முடியாது. எது பேசினாலும் தவறாக தான் சொல்வேன் என்பது அவள் உள்ளத் துணிபு. அதனை நான் மாற்ற விரும்பவில்லை. நான் எதிர் பார்த்தது போலவே அவர், ’நாசிலாமா’ என்றார். நாசிலாமா மலேசியாவிற்கு வரும் தமிழர்களின் தேசிய உணவு. அதில் தேங்காய் சாதம், வேற்கடலை, சிறிய நெத்திலி துண்டுகள், சம்பள் (ஒரு வகை குழம்பு) இடம்பெற்றிருக்கும்.

இருவரும் சாப்பிட்டு முடித்து பத்துமலைக்குச் சென்றோம். செல்லும் வழியில் கிருபாவிற்கு சந்தேகம், “கருவாடு சாப்பிட்டுட்டு முருகன் கோவிலுக்கு போலாமா?” என்றாள்.

நல்ல சந்தேகம் தான் ஆனால் மலேசியாவில் சைவ உணவென்பது வழக்கில் இல்லாத ஒன்று. “போலாம் தப்பில்லை. சிவனும் பிள்ளைக்கறி உண்ட பின் இந்த மலைக்கு வந்து தவமிருந்ததாக ஒரு கதையுள்ளது.” என்றேன். “அப்படியா?” எனச் சந்தேகத்துடன் பார்த்தாள். ஆனால் அக்கதை அவளுக்கு தேவை பட்டதால் அதைக் கொண்டே சமாதானம் ஆனாள்.

பத்துமலை எனக்கு முக்கியமாக படுவது அதன் மலை அமைப்பால் தான். சுண்ணாம்பு பாறையால் ஆன மலைக் குகை. குகையின் மையத்தில் மேலிருந்து ஒரு பெரிய வட்ட இடைவெளியில் ஒளி ஊடுருவி வருகிறது. அந்த மலை அமைப்பே எவ்வளவு பெரிய குறியீடு என நினைத்துக் கொண்டேன். நானென்று மனித இனம் பிரக்ஞையுடன் தன்னை புவியில் நிகழ்த்திச் செல்வது அதிகபட்சம் நூறு ஆண்டுகள். மொத்த மனித குலத்தின் வரலாறு என நமக்கு கிடைப்பது அதிகபட்சம் ஐயாயிரம் ஆண்டுகள். ஆனால் அம்மலை தன்னை பல லட்சம் ஆண்டுகள் உருக்கி, வடிவம் மாற்றி இந்நிலையில் இப்படி நம்முன் நின்றுக் கொண்டிருக்கிறது. அதன் இடைவெளியிலிருந்து எப்போதும் நீர் சிறு அருவி போல் சொட்டிக் கொண்டே இருக்கும். அதன் நிலைத்தன்மை முன் நம் பிரக்ஞை செயலிழக்கவே செய்கிறது. கான்கிரிட்டால் ஆன கோவில் போன முறையே என்னை ஈர்க்கவில்லை. ஆனால் அம்மலை அதன் முன் நாம் ஒவ்வொரு முறையும் படியில் ஏறிச் செல்ல செல்ல நாமும் அதில் ஒருவன் என்னும் எண்ணத்தை உருவாக்குகிறது. வெள்ளை பெரும்பாறையொன்று உருகி வழியும் பெருங்கருணையின் சான்று பத்துமலை. அக்கருணையை முருகன் வடிவாக முன்னிருத்த முயற்சித்தனர். ஆனால் அச்செயலை செய்தவரின் ஆணவமே பிரதானமாக முன்னின்றது. எனக்கு அச்சிலை மலையின் எழிலை குலைத்துவிட்டதாகவே பட்டது.

எந்த மலையை ஏறும் போது ஏற்படும் பதற்றம் அங்கே என்னுள் ஏற்பட்டது. அது என்றுமென நிலைப்பவை முன் மானுடன் கொள்ளும் அச்சம் என நினைத்துக் கொண்டேன். பத்துமலை முருகன் கோவிலை சுற்றி வந்த பின் ஒரு இளநீர் பருகினோம். மலேசிய இளநீர் தமிழக இளநீரை விட மூன்று மடங்கு பெரியது.

நாங்கள் இளைப்பாரி முடிப்பதற்குள் நவீன் அண்ணா காரில் வந்திருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு பின் அவரை நேரில் சந்திக்கிறேன். 2020 இல் இருந்து பலமுறை அவர் இந்தியாவிற்கு வரும் பயணத் திட்டம் இருந்தது. ஆனால் கோவிட் தொற்று காரணமாக அனைத்தும் ரத்தானது. 2019 இல் முதல்முறை அவரை பார்த்ததில் இருந்து இந்த மூன்று ஆண்டுகளில் இருவரும் பலவித பயணங்களில் மனதளவில் ஒன்றாக பயனித்திருக்கிறோம். இருவரும் ஒருவர் பயணத்தில் மற்றவர் துணை நின்றிருக்கிறோம். எல்லோருக்கும் தெரிந்தது போல் என் எழுத்துலகின் முக்கியமான நபர் நவீன் அண்ணா. நான் நாவல் எழுத முடிவு செய்தவுடன் முதலில் சொன்ன மூன்று பேர்களில் ஒருவர். எல்லா விதத்திலும் இந்த மூன்று ஆண்டுகளில் வழிகாட்டியாகவும், அண்ணனாகவும் என்னுடன் தொடர்ந்து வந்திருக்கிறார். எனக்கு ஒரு சிக்கலென்றால் நான் இன்று அலைக்கும் நபர் நவீன் அண்ணா தான். இலக்கியமே எங்கள் இருவரையும் இத்தனை பிரிக்க முடியாத உறவிற்குள் கொண்டுச் சென்றிருக்கிறது. மேலும் இன்று ம. நவீனை தவிர்த்து மலேசிய இலக்கியம் இல்லை என்ற நிலைக்குச் சென்ற முக்கிய ஆளுமை. என் கண் முன் நவீன் அண்ணாவின் செயல்களையும், ஊகத்தையும் பார்த்து வருகிறேன். அவர் கொடுக்கும் விசையிலேயே நான் இயங்குகிறேன்.

2019 இல் விமான நிலையத்தில் முதல் முறை பார்த்த அதே புன்னகையுடன் எங்களை, “ஏருங்க, ஏருங்க” என வரவேற்றார். காருக்குள் இருந்ததால் அவர் கைகளைப் பற்றி அவரைத் மனதால் தழுவிக் கொண்டேன்.

“நவின்… பாத்து மூனு வருஷம் ஆச்சு.” என்றார் வந்தவுடன். நான் அவரைக் கண்டதும் பேச சொல் இழந்திருந்தேன். என்னை மீட்டெடுக்க சிறிது நேரம் எடுத்தது. இருவரும் மூன்று ஆண்டுகள் கதையை பேசிக் கொண்டிருந்தோம்.

நவீன் அண்ணா அன்றைய பயணத் திட்டத்தை மீண்டும் ஒருமுறை சொன்னார். அதில் பாதி இடங்கள் நான் முன்னரே கண்டிருக்கிறேன். ம. நவீன், அரவின் குமார் கதைகள் வழியாக.

அவர் காடியில் நாங்கள் கோலா லம்பூரின் ஒரே மலேசிய பழங்குடி காட்சியகமான ஓராங் அசிலி காட்சியகத்திற்குச் சென்றோம். போன முறை சென்றது போலவே பத்துமலைக்கு போய்விட்டு ஓராங் அசிலி காட்சியகத்திற்கு. போன முறை காட்சியகத்தின் வாயிலில் இருந்த பழங்குடி அங்காடியில் சில விளையாட்டுகள் இருந்தன. அவை பழங்குடியினரின் வேட்டை ஆயுதங்களைக் கொண்டு ஆடுவது. அந்த கடை இம்முறை மதிய நேரம் என்பதால் அடைத்திருந்தது. போன முறை வாயால் ஊதி ஏட்டி எறிவது, சிக்கலான முடிச்சை எடுப்பது போன்ற விளையாட்டுகளில் பல நிமிடம் முயற்சிக்கு பின் தோற்றேன். எனக்கு அடுத்து அதை செய்த சைதன்யா எளிதாக அதில் வென்றாள். அவளிடம் இருக்கும் நிதானத்தை கண்டிருக்கிறேன். ஒரு விஷயத்தில் நானோ, அஜியோ பதறி முட்டி மோதி தோற்போம். சைதன்யா அதற்கு எளிமையான வழிமுறையை நிதானமாக கண்டடைந்திருப்பாள். கிருபாவும் அப்படி தான். பெண்களுக்கே உள்ள இயல்பு அது.

இம்முறை விளையாட்டு இல்லாததால் நேராக காட்சியகத்துள் சென்றோம். பழங்குடி இனத்தின் அன்றாட பயன்பாட்டு பொருட்கள், ஆயுதங்கள், திருமண சடங்கின் மாதிரிகளைத் தவிர என்னை ஈர்த்தது இரண்டு விஷயங்கள் ஒன்று அவர்களிடம் இருக்கும் மாந்திரீக சடங்குகள். மாந்திரீகத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வெவ்வேறு பூஜை பொருட்களை பயன்படுத்துகின்றனர். அதே வேளையில் தன் எதிரிகளுக்கான மாந்திரீக பொருட்களையும் அவர்களே பிரத்யேகமாக வைத்திருந்தனர்.

பீதியுடன் அதனைக் கடந்து வந்த போது ஒரு வாசகம் என்னை கவர்ந்தது. அது ஓராங் அசிலி பழங்குடியினரிடம் உள்ள வழக்கம். அவர்கள் தங்கள் கனவில் காணும் ஒன்றை தங்கள் விதியென கருதுகின்றனர். அவர்களின் அன்றாடத்தை அக்கனவில் நிகழ்ந்தது படி அமைத்துக் கொள்கின்றனர்.

அவ்வரியை படித்ததும் அங்கேயே நின்றுவிட்டேன். ஒரு எழுத்தாளனுக்கு எத்தனை முக்கியமான வாசகம். எழுத்தாளன் அவன் புனைவை கனவிலிருந்து சமைத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறான். பழங்குடியின் அதே மனநிலையே எழுத்தாளன் சென்று தொடுவது. அது இம்மானுடக் குலத்தை முன்னகர்த்திச் சென்ற முதல் மனிதனின் மனநிலை. அதிலிருந்து கிளைத்து வந்த பழங்குடியின் மனநிலை. அப்பழங்குடியில் நானும் ஒருவன் நான் இங்கிருந்து மானுடக் குலத்தை கனவின் மூலம் முன்னகர்த்தும் பணியைக் கொண்டவன் என்ற போது வரும் செயலூக்கத்தால் அடையும் பதற்றமது. அத்தருணத்தில் அந்த பதற்றம் என்னுள் நிலைக்க விரும்பினேன். அதன் பொருட்டு அவ்வாசகத்தை மீண்டும் மீண்டும் படித்தேன். இறுதியாக காட்சியகத்தை விட்டு திரும்பி வரும்போதும் மீண்டும் உள்ளே சென்று அவ்வாசகத்தை படித்துவிட்டு திரும்பினேன்.

மேலும்…

Leave a comment