மலேசிய பயணம் – 2 எழுத்தாளனின் உலகென்பது…

கே.எல் சென்றதும் முதலில் நமக்கு பத்துமலையை காட்டிவிட்டு நேராக கே.எல் சிட்டி சென்டரில் உள்ள பெட்ரோனாஸ் டவரைக் காட்ட கூட்டிச் செல்வதே தமிழகத்திலிருந்து வழக்கமாக அறிந்திருக்கிறோம். ஆனால் அவை உண்மையிலேயே கே.எல் பார்ப்பதல்ல. ஒரு நகரின் மூகாந்தரம் அது அவ்வளவு தான். பெரும்பாலும் நம் பயணத்தை நகரின் மூகாந்தரத்துடனே முடித்துக் கொள்வோம். மதுரை வந்து மீனாட்சியை தரிசித்துவிட்டு பேமஸ் ஜிகர்தண்டா அருந்திவிட்டு, திருமலை நாயக்கர் மகாலில் ஒளியும், ஒலியும் பார்த்துவிட்டு திரும்புவது போல் அது.

சென்னை மெரினா கடற்கரையை கண்டு விட்டு மொத்த சென்னை நகரை பார்த்த ஆனந்தத்தில் ஊர் திரும்புவது போல. உண்மையில் பெருநகரங்களே இந்நூற்றாண்டிற்கான புனைவு வெளி. சென்னை ஆர்மேனியன் சர்ச் அதனை சுற்றி வாழ்ந்த ஆர்மேனியர்களை மட்டும் வைத்தே ஒரு பெரிய நாவல் எழுதலாம். வரலாற்றில் அவர்கள் அங்கே இருந்ததற்கு சான்று இப்போது இருக்கும் ஆர்மேனியன் சர்ச் மட்டுமே. யோசித்துப் பார்த்தால் வெளியில் புனைவிற்கான சாத்தியங்கள் கொட்டிக் கிடக்கின்றன. எழுத்தாளர்கள் சோம்பேறிதனத்தால் திரும்ப திரும்ப அடுப்படி சண்டைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றுகிறது.

நவீன் அண்ணா பழங்குடியினர் அருங்காட்சியகத்திலிருந்து எங்களை நேராக சென்டரல் மார்கெட் பகுதிக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் சொன்னார், “நவின் கே.எல் சுத்தி பாக்க கூட்டி வர்றவங்க பெட்ரோனாஸ் மட்டும் காட்டி இது தான் கே.எல்ன்னு சொல்லுவாங்க. இன்னைக்கி கே.எல் ஓட பல மொகத்த உங்களுக்கு காட்டுறேன் வாங்க” என்றார்.

நாங்கள் மூவரும் சென்டரல் மார்கெட்டினுள் நுழைந்தவுடன் சந்தைகளாக இருந்தன. அனைத்தும் துணி, ஆபரண்ங்கள், மிட்டாய் மற்றும் அழகு கைவிணைப் பொருட்கள் கடைகள். நவீன் எங்களை பார்க்க மட்டும் சொன்னார். வாங்குவதற்கு கே.எல்லிலேயே வேறு பக்கம் கடைகள் உள்ளது என்றார். நுழைந்து சிறிது தூரம் சென்றதும் கிட்டார், கீப்போர்டுடன் ஒரு இசைக் குழு. குழுவினர் யாருமில்லை பொருட்கள் மட்டும் அங்கே வழியிலிருந்தது.

ஒரு சுற்று சுற்றி வந்தவுடன் நான் நவீன் அண்ணாவிடம் சொன்னேன், “அண்ணா இது என்ன ணா அரவின் குமார் சிறுகதை களம் மாறி இருக்குன்னு” என்றேன்.

நவீன் ஆச்சிரியத்துடன் சிரித்து, “உண்ம தான் இங்கே தான் அரவின் குமார் பள்ளி இருக்கு. இந்த இடத்த தான் அவர் புனைவாக்குவாரு.” என்றார். அதுவே ஒரு புனைவெழுத்தாளனின் ஆக பெரிய சாதனை என நினைத்துக் கொண்டேன். ஒரு இடத்தை கண்டவுடன் நம் நினைவில் ஒரு எழுத்தாளரின் பெயர் எழுகிறதே. உண்மையில் எழுத்தாளனும், கலைஞனும் நினைவுகளிலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

நானும், கிருபாவும் சென்டரல் மார்கெட்டின் முதல் தளத்தை சுற்றி வர நவீன் கீழே இருந்தார். முதல் தளத்தில் முழுவதும் கலைப் பொருட்கள் இருந்தது. முழுக்க முழுக்க கிழக்காசிய சாயல் கொண்ட கலைப் பொருட்கள். அதில் ஓரிடத்தில் தோல்பாவைக் கூத்து பொம்மைகள் இருந்தது. நான் கிருபாவிடம் காட்டினேன். அவள் “மண்டிகர்” என்றாள். தமிழகத்தில் மண்டிகர் இனத்தவர்களே தோல்பாவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். தமிழ் விக்கியில் மண்டிகர் இனம் பற்றி ஒரு பதிவை நான் எழுதியிருந்தேன். பேராசிரியர் பக்தவத்சல பாரதி தொகுத்த தமிழக நாடோடிகள் புத்தகமும், அ.கா. பெருமாளின் தென்னிந்திய தோல்பாவைக் கூத்து புத்தகமும் முக்கியமானது. தோல்பாவைக் கூத்து அருகிவிட்ட இந்நூற்றாண்டில் அவர்கள் சொல்லிருந்தே மண்டிகர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

கீழே வந்து ஃபிஷ் ஸ்பா (Fish Spa) மீன் காலைக் கடித்து தோள் நோய் குனமாக்கும் ஸ்பா இருந்தது. கிருபா போகலாம் என்றாள். நான் தயங்கினேன். ஒவ்வொரு முறையும் மலேசிய வெள்ளிக்கு நிகரான இந்திய பணத்தை மனத்தில் கணக்கிட்டு கொண்டிருந்தேன். அதற்குள் நவீன் அண்ணா பணம் கொடுத்தார். அங்கிருந்த பெண்மணி பத்து நிமிடம் எனக் கறாராக சொன்னார். நவீன் அண்ணா மலாயில் பேசியதற்கு பதில் கூறவில்லை. நவீன் அண்ணா என்னிடம், “வீட்டுல பிரச்சன்ன போல” என்றார்.

சிரித்து மூவரும் கால் கழுவோம் உள்ளே வைத்தோம். முதலில் நவீன் அண்ணா வைத்து துள்ளினார். கால் கூசியது. அவரை தொடர்ந்து கிருபா, நான் யோசித்துக் கொண்டிருந்தேன். நவீன் அண்ணா ஆடிக் கொண்டேயிருந்தார். நான் யோசிக்காமல் உள்ளே விட்டேன். காலில் கூச்சம் ஒரு நிமிடம் நீடித்தது விடாபிடியாக நான் கால்களை உள்ளே வைத்திருந்தேன். அதன் பின் கூச்சமில்லை ஆனால் மொத்த மீனும் என் கால்களைச் சுற்றி மட்டுமே வட்டமிட்டன. சரியாக பத்து நிமிடத்தில் பெண்மணி எங்களிடம் வந்து மலாயில் முடிந்துவிட்டது எனக் கூறினாள்.

அங்கிருந்து நவீன் எங்களை பெட்டலிங்க் ஸ்டிரீட் மார்கெட் பகுதி கூட்டிச் சென்றார். முழுதும் வணிக பகுதி. பெரும்பாலும் சீனர்கள், தமிழர்கள். சிகண்டி நாவலில் வரும் தெரு அது. முற்றிலும் வணிக நிலம் கே.எல்லின் மத்தியில் அமைந்துள்ளது. அங்கே வணிக தர்மம் மட்டுமே உள்ளது. முன்னர் இது தமிழக தாதாவால் ஆளப்பட்டது. தற்போது சீனர்களின் கையில் உள்ளது என்றார். இந்நிலத்திற்கு பின்புள்ள கதையை ராசன் என்ற சிறுகதையில் எழுதினார். பின் அது விரிந்து சிகண்டியானது. சிகண்டியில் இப்பகுதியிலுள்ள வணிக முறைமையும், மேலடுக்கு வணிகம், அதனுள் உள்ள பேரம், அதனுள் உள்ள கட்டப்பஞ்சாயத்து என விரிவாக வரும் இருள் உலகம் அவை.

நாங்கள் போகும் போது சென்னையிலுள்ள பாண்டி பஜார் போல் முற்றிலும் வணிக போட்டியில் நிறைந்திருந்து. “இங்க எதுவேனாலும் வாங்கலாம்” என்றார். சு. வேணுகோபால் ஒருமுறை வந்து ஓர் அழகிய பேனா வாங்கி சென்றதை நினைவுக் கூர்ந்தார்.

நாங்கள் அந்த தெரு முழுக்க சுற்றி வந்து கடைசியில் அதன் மையத்திலிருந்த இடத்தில் ஒரு டுரியான் பழக் கடை இருந்தது. நான் அதைப் பார்த்ததும் வேண்டாமென்றேன். நவீன், “சாப்பிடுங்க இங்க நல்லா இருக்கும்” என வர்புறுத்தினார். நான் அதற்கு மசியவில்லை. ஏமாறமாட்டேன் என உறுதியாக இருந்தேன். ஆனால் கிருபாவிற்கு அந்த பழத்தின் மேல் ஆசை தொற்றிக் கொண்டது.

என்னருகே வந்து “எப்படி இருக்கும்?” எனக் காதில் கேட்டாள். “பலாப்பழம் புளிச்சு அழுகி போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்” என்றேன். நவீன் அண்ணா, “சும்மா சொல்றான் நல்லா இருக்கும் சாப்பிட்டு பாருங்க” எனச் சொல்லி ஒன்றை ஆர்டர் செய்தார்.

கடைக்காரர் பெரிய பழமாக எடுத்தார். நான் அதை மறுத்து இருப்பதிலேயே சின்ன பகுதியாக எடுத்துக் கொடுத்தேன். அவள் சாப்பிட்டுவிட்டு நல்லாருக்கு என்றாள். என்னால் அவளை நம்ப முடியவில்லை. அவள் கண்ணைப் பார்த்தேன். உண்மையிலேயே ரசித்து தான் சொல்கிறாள். நவீன், “நல்லாருக்குல, இவங்கல்லாம் ரசனையத்தவங்க” என்றார்.

நான் அவள் முக பாவனையில் ஏமாந்து வாங்கி சாப்பிட்டேன். ஒரு துளியிலேயே எனக்கு முதல் முறை சாப்பிட்ட அதே அழுகள் புளிப்பும், துவர்ப்பும் வந்து தொண்டையை அடைத்தது.

அங்கிருந்து புக்கிங் பித்தாங் பகுதிக்கு சென்றோம். அது வணிக வீதியிலேயே சற்று அந்தஸ்து கூடிய பகுதி. இது மலேசியர்களுக்கான வணிக பகுதி என வைத்துக் கொள்ளுங்கள் என்றார் நவீன்.

ஒரு தெரு முழுவதும் பார் இருந்தது. ஒரு தெரு முழுவதும் மசாஜ் சென்டர். ஒரு தெரு முழுவதும் உணவு வீதி. அங்கே உணவு சாப்பிட்டுவிட்டு துகு நெகெரா (Tugu Negera) என்று சொல்லக் கூடிய உலகப் போர்களில் மாந்தவர்களின் நினைவு சின்னம் பகுதிக்கு சென்றோம் நாங்கள் அங்கே செல்ல ஆறு மணியை கடந்திருந்ததாள் அடைத்திருந்தார்கள்.

வெளியிலிருந்து பார்த்துவிட்டு வெளியேறினோம். சாலையில் அதிசயமாக ட்ராபிக் குறைவாகவே இருந்தது. நவீன் எங்களை பத்துமலையில் ராமர் கோவில் முன் கொண்டுவந்து விட்டார். மறுநாள் அவர் மனைவி பவித்தாரா வந்து அழைத்துக் கொள்வார் ஏழு முப்பதிற்கு தயாராகி இருக்கும் படி சொன்னார்.

நாங்கள் ராமர் கோவிலின் வெளிதிண்ணையில் பெரிய அனுமன் சிலை முன் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். உள்ளே கோவிலில் கதகளி போல் ஒரு ஆட்டம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. அதனை பார்க்க உள்ளே சென்றோம். கதகளி வேடமணிந்து இருவர் பரதம் ஆடிக் கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். உள்ளே சென்றதும் தான் தெரிந்தது திருமண நிகழ்வு. அவர்களுக்கு பின்னால் மாப்பிள்ளை, பெண்ணும் சுற்றி வந்தனர். இந்தியாவில் இருப்பது போல் இருக்கமும், பதட்டமும் மலேசிய திருமணங்களில் இல்லை. இரவு திருமணமா எனக் கேட்டேன். “ஆமா இப்ப தான் முடிச்சுது” என அங்கிருப்பவர் சொன்னார். ரொம்ப எளிமையாக கோவிலில் வைத்து நடந்த திருமணம்.

இருவரும் அதைப் பார்த்து விட்டு அறைக்கு வந்து உறங்கினோம். நான் படுத்தது மட்டும் தான் நினைவிருந்தது. பயணக் களைப்பு எல்லாம் சேர்ந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை ஏழு மணிக்கு பவித்தாரா எங்களுக்கு வேக்கப் கால் அடித்திருந்தார். அதற்குள் நாங்கள் எழுந்து குளித்து தயாராகி இருந்தோம். கீழே வந்த போது எங்கள் விடுதி வாசலில் காரில் காத்திருந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன் நான் மலேசியா வந்த போது எங்களை லிட்டில் இந்தியாவிலிருந்து பத்துமலைக்கு பவித்தாரா தான் கூட்டி வந்தார். அன்றிருந்த அதே புன்னகை அவரிடம். இப்போது கூடுதல் மகிழ்ச்சியாக இருப்பதாக பட்டது. அப்போது எனக்கு நவீன் அண்ணாவும், பவித்தாராவும் காதலில் இருப்பது தெரியாது. நவீன் அண்ணாவிடம் பிறகு கேட்ட போது எனக்கே அதைப் பற்றி தெரியாது என்றார்.

பொதுவாக காதலை மறைக்கும் சுபாவம் பெண்களுக்கு தான் இருக்கும். இருவருக்கும் கொரோனா காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தள்ளி போய் 2021 இல் நிகழ்ந்தது. 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அஞ்சனை பிறந்தாள்.

பவித்தாரா எங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அஞ்சனை கூச்ச சுபாவம் என நவீன் சொல்லியிருந்தார். நான் சென்றதும் என்னிடம் வந்துவிட்டாள். பின் அப்பா இல்லை இது வேறு தாடி வைத்த மாமா என கண்டு கிருபாவிடம் எட்டி பாய்ந்தாள். அவளிடம் விளையாடத் தொடங்கிவிட்டாள். சிறிது நேரத்தில் என்னிடமும் விளையாட ஆரம்பித்தாள்.

நவீன் அண்ணாவிடம் உள்ள அதே பிடிவாதம் அவளிடம் இருந்தது. ஒன்று வேண்டுமென்றால் வேண்டும் அதற்கு மாற்று கருத்து அவளிடம் இல்லை. நான் சொன்னேன், “நவீன் அண்ணா பிடிவாதமும் உங்க சிரிப்பும் அவகிட்ட இருக்கு” என்றேன். பவித்தாரா சிரித்தார்கள்.

எங்கள் இருவரையும் அங்காளம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். போன முறை வந்த போதும் நான் அங்கே சென்றேன். அக்கோவில் ஒரு வகையில் நவீன் அண்ணாவின் குலத் தெய்வம் கோவில் போன்றது. நவீன் அண்ணா போன்ற நாத்திகர்களும் வணங்க ஒரு தெய்வம் தேவைப்படுகிறது.

அக்கோவிலில் படுத்த கோளத்தில் அம்மன் இருக்கிறாள். அவளுக்கு குங்குமம், மஞ்சள் கலந்து சார்த்தி வழிபடுகின்றனர். நாங்கள் அங்கே கோவிலில் சிறிது நேரம் இருந்தோம். பவித்தாராவிற்கு மதியம் வேலை அவர் கே.எல்லிலேயே ஆசிரியராக பணியாற்றுகிறார். நவீன் அண்ணாவிற்கு காலை வேலை அவர் கே.ஏல்லில் இருந்து சிலாங்கூர் செல்ல வேண்டும். அவர் செய்யும் சேட்டைகளுக்கு பினாங்க் மாற்றாமல் சிலாங்கூரில் வைத்திருப்பது அவர் மேல் உள்ள நல்லெண்ணத்தால் என நினைத்துக் கொண்டேன். நவீன் வரும் வரை இருவரும் பர்கர் சாப்பிட்டுவிட்டு காத்திருக்கலானோம்.

என் பேச்சு இயல்பாக நவீன் அண்ணாவை நோக்கிச் சென்றது. நான் கிருபாவிடம் நவீன் அண்ணா செய்யும் செயல்கள் குறித்துக் கூறிக் கொண்டிருந்தேன். அவர் தமிழகத்தில் ஜெயமோகன் சார் செய்வது அனைத்தையும் மலேசியாவில் செய்கிறார்.

இன்றைய மலேசிய இலக்கிய முகமென்பது தமிழக இலக்கியத்திற்கு நிகராக தன் இடத்தை நிறுவிக் கொண்ட ஒன்று. அது சிங்கப்பூரிலோ, இலங்கையிலோ நிகழவில்லை. அந்தந்த காலத்தின் ஆளுமைகளே அக்கால இலக்கியத்தை வடிவமைக்கின்றனர் எனச் சொல்லிக் கொண்டிருப்பதற்குள் நவீன் அண்ணா வெள்ளை முழுக்கை சட்டை கருப்பு பேண்ட்டில் வந்தார்.

மேலும்…

Leave a comment