மலேசிய பயணம் – 3: நஞ்சுண்ட ஆழ்கிணறு

நவீனின் நண்பர் திருமுத்துவுடன்

நவம்பர் 19 அன்று தான் மலேசியாவில் தேர்தல் முடிந்து முடிவு அறிவித்திருந்தார்கள். நான் இந்தியாவில் மட்டும் தான் தேர்தலில் சமீப காலங்களில் குழப்பங்களும் கட்சி தாவல்களும் நிகழ்கிறது என நினைத்திருந்தேன். ஆனால் இம்முறை மலேசியாவில் இந்தியாவை விட மோசம். காரணம் எந்த கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. அங்கே முக்கிய தலைவராக பார்க்கபட்ட மகாதீர் கட்சி ஒரு இடம் கூட பெறவில்லை.

நவீனும் பிற நண்பர்களும் சொன்னதை வைத்து மலேசிய அரசியலை நான் புரிந்துக் கொண்டது இது. மலேசியாவில் பல் இன நல்லெண்ணம் கொண்ட கட்சியாக கருதப்படும் அன்வரின் கட்சி அதிக இடங்களைப் பிடித்திருந்தது (82). அதற்கு அடுத்தபடியாக மொஹெய்தீனின் கட்சி (72). மூன்றாவது இடத்தை பிடித்த பாரிசன் நேஷனல் (30) ஆட்சியை தீர்மானிக்கும் கட்சியாக மாறியது. மொஹெய்தீனின் கட்சி முஸ்லீம் அடிப்படைவாத கட்சியாக பார்க்கப்படுகிறது. எனவே மலேசிய தமிழர்களும், சீனர்களும் அன்வர் வரவேண்டுமென எதிர்பார்ப்பதாக நவீன் சொன்னார். அவரும் அதையே விரும்பினார். மலேசியர்கள் மொஹெய்தீன் வரவேண்டுமென விரும்பினர். பெரும்பான்மையில்லாததால் பெரும் பரபரப்பு. கலவரம் வரக் கூட வாய்ப்பிருப்பதாக நவீன் சொன்னார். எங்களை ஒவ்வொரு நாளும் அழைத்து செல்ல வந்த நவீனின் சக ஆசிரியர் நண்பர் திருமுத்து, சண்முகா, செல்வம், அரவின் குமார் என ஒவ்வொருவரும் அதே சொன்னார்கள்.

நாளும் அவர்கள் வாட்ஸ்சப்பிலும், டிவிட்டரிலும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்திய அரசியலைப் போல் நொடிக்கு ஒரு மாற்றம் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. பாரிசன் நேஷனல் கட்சி அன்வர் கட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்தது. அது நிகழ்ந்து சில மணி நேரங்களிலேயே கட்சியின் நான்கு முக்கிய உறுப்பினர்கள் அதனை எதிர்த்தனர். மீண்டும் இழுப்பறி. நல்ல வேலையாக மலேசியாவில் கட்சி தாவல்கள் இல்லை. கட்சி மாறினால் எம்.எல்.ஏ பதவியை ராஜனாமா செய்துவிட்டு தான் மாற வேண்டும். சமீபத்தில் இந்த சட்டத்தை கொண்டு வந்திருக்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் பதட்டங்களும் எதிர்பார்ப்புகளும் நண்பர்கள் மத்தியில். சுல்தான் அன்வரை ஆட்சியமைக்க சொல்லிவிட்டார் என அரவின் குமார் மெட்ரோ ரயிலிலேயே துள்ளி குதித்துவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் அது வதந்தி என அவர் சோர்ந்தார். இறுதியாக சுல்தான் தலையிட்டு அன்வர் கட்சியையும், பாரிசன் நேஷனல் கட்சியையும் கூட்டனி ஆட்சி அமைக்கும் படி கூறினார்.

நவீன் அண்ணாவின் நண்பரும் ஆசிரியருமான முத்து எங்களை கோலா சிலாங்கூரில் உள்ள அலையாத்தி காட்டிற்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். முத்து வன ஆர்வலர். சிறு வயது முதலே கோலா சிலாங்கூரின் வனபகுதிகளை சுற்றி அதனைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர். நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றது அவர் வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு எங்களுக்காக வந்தருந்தார்.

நவீன் அண்ணா வல்லினம் இதழ் வேலையிருந்ததால் எங்களுடன் வரவில்லை. நாங்கள் மூவரும் காட்டிற்குள் சென்றோம். முதலில் வாட்ச் டவரில் ஏறி சுற்றி பார்த்தோம். காட்டின் ஒரு எல்லையில் அழகிய ஏரி ஒன்றிருந்தது. அதனை கடந்து காயல். கோலா சிலாங்கூரில் பாயும் சிலாங்கூர் நதி கடலில் கலக்கும் இடம் அது. அதனைச் சுற்றி சதுப்புநிலக் காடுகள் அடர்ந்திருந்தன. சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பும் போது நாங்கள் நின்றிருந்த டவரின் கம்பியில் ஒரு பச்சை பாம்பு கைப்பிடி கம்பியினுள் இருந்த ஓட்டையினுள் சென்றது.

முத்து எங்களை காட்டினுள் கூட்டிச் சென்றார். வனப் பாதுகாப்பாளர் உள்ளே செல்லும் போதே கொசு கடியை தடுக்கும் மருந்தை பூசிக்கொண்டு போகும்படி சொன்னார். நாங்கள் மூவரும் “நாங்க பாக்காத கொசுவா” எனச் சென்றோம். சிறிது தூரம் சென்றதும் தான் கொசுவின் வீரியம் தெரிந்தது. எங்களை மொத்தமாக அள்ளி மொய்க்கத் தொடங்கியது.

‘அடாத கொசுவிலும் விடாது சுற்றி வருவோம்’ என்ற தீர்மானத்துடன் முன்னேறி சென்றோம். இத்தனை வருடங்களில் முத்து கூட இவ்வளவு கொசுவை பார்த்ததில்லை என்றார். நாங்கள் வந்த காலம் அங்கே அதிகம் மழை பெய்யும் காலம். போன ஆண்டு இதே நாட்களில் அங்கே வெள்ளம் வந்திருந்தது. வெள்ளம் மலேசியாவில் நவீன் அவர் வாழ்நாளில் பார்த்திராதது. போன ஆண்டு வெள்ளத்தால் சிலாங்கூர் மாநிலத்தில் கடும் போராட்டம் என்றார். ஆனால் ஒன்று மலேசியாவில் இந்த ஓராண்டிற்குள் வெள்ள வடிகால் முறைகளை சீராக அமைத்துவிடுவார்கள். சென்னையை போல் ஒவ்வொரு ஆண்டு வெள்ளம் வரட்டும் என காத்திருக்க மாட்டார்கள். இப்போதே கே.எல்லில் ஒரு நீளமான டனல் வெள்ள வடிகாலுக்காக அமைத்துவிட்டதாக நவீன் சொன்னார்.

நாங்கள் முத்துவுடன் அலையாத்தி காட்டினூடே சென்றோம். அலையாத்தி காட்டிலுள்ள மரங்கள் சதுப்பில் வளர்பவை அதனால் அதிக வேர் பிடிப்பு இல்லாதவை. எளிதில் சாய்ந்து விழுந்துவிடும். ஒரு சிறிய காற்றில் பெரிய மரக்குவியல்கள் சாய்ந்துவிடும். அவற்றை அப்புறப்படுத்தி சீர்படுத்துவது எளிய காரியமல்ல. இந்தியாவில் பிச்சாவரம் உட்பட்ட அப்படி எந்த அலையாத்தி காடுகளும் பரமரிக்கப்படுவதும் இல்லை. காடு தன்னை மீட்டு சுழற்சியில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. பாண்டிசேரி சாதனா காட்டில் தன்னார்வலர்கள் பேணுவதைக் கண்டிருக்கிறேன். ஒரு நாள் நானும் கிருபாவும் அவர்களுடன் சென்று மாட்டுத் தொழுவத்தை பாதுகாக்கும் வேலை செய்தோம்.

சிலாங்கூரில் மைக்கல் என்பவர் அக்காட்டை பாதுகாத்து வருகிறார். அங்கும் ஒரு தன்னார்வலர் குழுவே பாதுகாக்கிறது. நவீன் இக்காட்டை இயற்கை பூங்காவாக மாற்ற கேளிக்கை வணிக இடமாக அறிவிக்கயிருந்ததை எதிர்த்து அவர் பக்கத்தில் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு கட்டுரை எழுதினார் (அழிவை நோக்கி கோலசிலாங்கூர் அலையாத்தி காடுகள்). அது மலேசிய ஊடகங்களில் கவனம் பெற்றது. நவீனும், முத்துவும் சேர்ந்து அவர்களது பள்ளி மாணவர்களை கூட்டி வந்து ஒரு நாள் அங்கே தங்கி மாணவர்களுக்கு மரம் நடும் பயிற்சியும் கொடுத்துள்ளனர். அதன்பின் நிறைய பள்ளியிலிருந்து வருவதாக மைக்கல் நவீனிடம் சொன்னார்.

மேலும் இங்கே காணப்படும் சில்வர் சிலாங்கூர் லாங்கர் வகை குரங்குகள் இங்கே மட்டும் வளர்பவை. இவை அன்பானவை. நாம் சென்றால் நம் மடியில் அமர்ந்துக் கொள்ளும், நம் கைகளைத் தொட்டு தடவி பார்க்கும். போன முறையும் இதனை காண வந்தோம். ஜெயமோகன் அக்குரங்கின் கைகளைத் தொட்டுப் பார்த்து மனித கைப் போலவே உள்ளது எனக் கூறியதை நவீன் இம்முறையும் நினைவு கூர்ந்தார். இதை தவிர இங்கே மட்டுமே வாழும் வண்ணத்துப்பூச்சிகள், மீன் வகைகள், ஒற்றைக் கொடுக்குள்ள சிவப்பு, நீல நிற சிறிய ரக நண்டுகள் என இக்காட்டுக்கே உரிய உயிரினங்கள் நிறைந்தது. இதனை மக்கள் அதிகம் செல்லும் பூங்காவாக மாற்றினால் ஓர் பேரியற்கையின் அழிவு தான். ஆனால் இதற்கு முன் நடந்த  இறால், மீன் பண்ணைகளையும் தன்னார்வலர் குழுக்கள் போராடி நிறுத்தியுள்ளனர். நாம் போடும் இன்றைய அன்றாட கணக்குகளுக்கு அப்பாற்பட்டது இயற்கை அது தன்னை ஏதோ ஒரு வகையில் மீட்டு நிறுவிக் கொள்ளும். அதன் இறுதி பாதிப்பு மனிதனுக்காக தான் இருக்க முடியும்.

நாங்கள் காட்டைச் சுற்றி திரும்பி வரும் போது ஒரு நாகம் கடந்து செல்வதைப் பார்த்தேன். அதன் பின்பகுதி மட்டும். கிருபாவிடம் கத்தினேன். அதற்குள் சென்று மறைந்துவிட்டது. அதன் வால் நுணியை மட்டும் பார்த்ததாக சொன்னாள். நாங்கள் நவீன் அண்ணாவிடம் கூறினோம். அவர் இதுவரை அந்த காட்டில் பாம்பு பார்த்ததில்லை. பாம்பை விரும்பும் அவர் அதனை நாங்கள் பார்த்ததில் சிறு வருத்தம் கொண்டார்.

நாங்காள் மேலேறிச் சென்று சிலாங்கூர் மியூசித்திற்கு சென்றோம். அங்கே செல்ல தனி ரயில் வந்துவிட்டதால் படிகள் ஏறியே செல்ல வேண்டும் கார் செல்ல அனுமதியில்லாத ஒரு வழி பாதை. சிறிது தூரம் தான் ஆனால் நவீனுக்கு மூச்சி வாங்கியது. நான் போய் கார் எடுத்து வருகிறேன் எனச் சென்றார். முத்து ஒருவழி பாதை என எச்சரித்ததும் கண்டிப்பாக கொண்டு வருவேன் எனச் சொல்லிச் சென்றார்.

நானும் கிருபாவும் மியூசியத்துள் சென்றோம். இந்த மியூசியத்தின் வெளிய உள்ள விஷக்கிணறு பற்றி எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் ஒரு குறுநாவல் எழுதியுள்ளார். (விஷக்கிணறு). தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த குறுநாவல்களுள் ஒன்று. நவீன் அதனைச் சொல்லி வருத்தம் தெரிவித்தார். “நாம எழுதிருக்கலாமே நவீன். அவர் முந்திக்கிட்டாரு” என்றார்.

நானும், கிருபாவும் மியூசியத்தை சுற்றி வந்தோம். மலேசிய வரலாறு தாங்கிய மியூசியம். குறிப்பாக சிலாங்கூர் மாநிலத்தின் வரலாறு தாங்கிய மியூசியம். சுல்தான்களுக்குள்ளான போர்கள், போர்ச்சுகீஸிய, ஆங்கிலேயே வணிகங்கள் என மியூசியம் கண்ணை நிறைத்தது. நான் ஒவ்வொன்றாக தாவி தாவி விஷக்கிணற்றில் வந்து நின்றேன். போரும், வணிகமும் முயங்கி வளர்ந்து வந்த சிலாங்கூரின் வரலாறு. அந்த விஷக்கிணறு ஒரு ஜின்னின் சாபத்தால் விஷம் மண்டிய கிணறாக பார்க்கப்படுகிறது. போரும், வணிகமும் ஒர் எல்லையில் நாட்டை நவீனமாக்கினாலும் மறு எல்லையில் அதன் ஓரத்தில் ஒரு பெரிய விஷக்கிணற்றை கட்டி மனித குவியல்களை அதனுள் தள்ளிவிட்டுள்ளனர். அந்த மியூசியத்திலிருந்து வெளியே வரும்போது நான் தளர்ந்திருந்தேன். அதற்காகவே அந்த விஷக்கிணறை அங்கே வைத்து பாதுக்காக்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.

நவீன் அதன் பின்னால் உள்ள ஜப்பானியர்கள் பலிக் கொடுக்கும் இடத்திற்கு கூட்டிச் சென்றார். ஜப்பானியர்கள் தாங்கள் குற்றவாளிகள் எனக் கருதியவர்களை அங்கிருந்த நடுகல் (மெக்கீரின்) வைத்து தலையை வெட்டி பலிக் கொடுத்துள்ளனர். அதன்பின் கம்யூனிஸ்ட்காரர்களை அதனை தொடர்ந்துள்ளனர்.

குறைந்தது பத்தாயிரம் வருடம் பழமையான அந்த நடுகல் இன்று பலிக் கொடுக்கப்பட்டதன் நினைவு சின்னமாகவே நினைவு கூறப்படுகிறது. நான் அதனை மறக்க விரும்பினேன். நவீனிடம் சொன்னேன், “அண்ணா இந்த கல் உங்கள் தொல் மூதாதை ஒருவர் உங்களிடம் உரையாட அவர் நினைவாக விட்டுச் சென்ற கல் ணா” என்றேன். அவரும், “ஆமா நவீன்.” எனப் புன்னகைத்தார்.

நான் அந்த நடுகல்லையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதன்பின் அங்கிருந்து கிளம்பினோம். நேராக நவீனின் வீட்டிற்கு. நவீன் குளித்து வந்து வல்லினம் வேலையில் அமர்ந்தார். வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. அதில் அன்வர் வருவாரா? மொஹெய்தின் வருவாரா? என்ற தொடர் விவாதங்கள் இந்திய ஊடகங்களைப் போல்வே அங்கும் நொடிக்கு  நொடி சுடச்சுட செய்திகளுடன் வந்தனர்.

அதனைப் பார்க்கும் போது விஷக்கிணறு நினைவில் எழுந்தது. இன்றைய அரசியலும் அதை சார்ந்த ஊடக குவியல்களும் நம்மை வேறொரு விதத்தில் விஷக்கிணற்றில் தள்ளிக் கொண்டிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். நான் சீக்கிரமாகவே தூங்கச் சென்றேன். கிருபா தூக்கம் பிடிக்காமல் புரண்டுக் கொண்டிருந்தாள். நான் என்னை மீறிய நினைவுகளில் தூங்கிப் போனேன். தூக்கத்தில் மீண்டும் விஷக்கிணறு வந்தது. ஆழம் அதிகமில்லாத கிணறு அதன் முன் நான் நின்று பயந்துக் கொண்டிருக்கிறேன். பின்னிருந்து யாரோ, “குதிங்க அதிக ஆழமொன்னும் இல்லை பயப்படாதீங்க” என்கிறார்.

நான் “செரி” எனச் சொல்லிவிட்டு படுத்து உறங்கினேன்.

மேலும்…

Leave a comment